கரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6
ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது.உள் நிலைமைகளை அவதானித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் வார்த்தையை கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதி செய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப் பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான்.
கரையோரமாக நீண்ட தூரம் நீந்திச்சென்றான். கடற்கரை பூராகவும் இராணுவமும், கடலில் கடற்படையும் அதியுசார் நிலையில் நின்றது. கடலினுள் பகைப் படகுகள் ரோந்து செய்த வண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ சாத்தியமற்றதானது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனைகூடச் செய்யவில்லை. செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது.
சாதகமான சூழலுக்காகக் கடலில் மிதந்த படியே காத்திருக்கலானான். பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழட்டி விடலானான். தொலைத்தொடர்பு சாதனமும் ‘GPS’ ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சி யிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைச் சித்திரவதை செய்தது. தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான். பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத் தொடங்கினர்.
ஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்துகொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக்கொண்டான். உட் சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப் படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத் தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக் களஞ்சியங்களும் அழித்தொழிக்கப்பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம் பிடித்த பூசனிக்காயைத் துண்டுதுண்டாகச் சாப்பிட்ட வாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்க வைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான்.
தனியான இவன் பகைத் தளத்தினுள் கரும் புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி நாசம் ஏற்படுத்தினான். தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்துகொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப்பட்டது. அப்பிர தேசம் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக்கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான்.
மெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு திரவ ஊடகங்களைக் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்குகளும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளி வந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து. தொடர்ந்து
நியூமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்து வமனையில் சிகிச்சை பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு ஆயத்தமாகினான்.
அக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் “பூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எது” வென கேட்க “யாரு, “கரும்புலி பூட்டோவா!” என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தக் கணங்கள் அவர்களுக்கே உரித்தானவை. பலவருடங்களாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும்.
ஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள்.
அடுத்த பணிக்காக இவன் தயாராகிக் கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது. உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பாத்திரத்தை இவனையே நடிக்கும்படியும். விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச் செயலை வைத்திருப்பவர்கள்.
செய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணாம்சத்தினால் வரலாறு திரிந்துவிடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே அப்பாத்திரமாக நடிக்கச்சொன்னார்கள். வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப் பாத்திரங்களுக்குத் தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் நிமித்தம் பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளுர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப் படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான்.
பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் “புயல் புகுந்த பூக்கள்” என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான்.
தொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி தியாகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும்புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனது சிலவருடச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அத்திவாரத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது.
மாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி யுத்தத்தைத் தொடங்கினான். முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றான். இராணுவத்தை திசைதிருப்பவும் குழப்பவும் அவசரமாக நடவடிக்கையில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானன். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான். ஓகஸ்ட் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான். மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக் கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்தான். பாரிய இராணுவத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. “நம்பர் வண்” தொடர்பு இல்லை என.
இம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. ஒரு வேவுப் புலி நிபுணனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை,
உச்சவினைத்திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளி களுக்கான ஒரு ” உதாரண புருசனை”” பட்டறி வால் உருவான போரியல் ஞானியை, எல்லா வற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவ னையும் நேசித்த ஒரு “நம்பர் வண்”
ஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்துவிட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவ னது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும்.
குறிப்பு:- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி கோடிகாட்டுகின்றது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.
இறுதி முடிவு,,,,…..

உங்கள் கருத்து